Friday, January 27, 2012

சலூன்


தற்போது சலூன் கடைகள் எல்லாம் ஆண்கள் அழகு நிலையங்களாகிவிட்டன.  சலூன் கடை என்பதை "மென் பியூட்டி பார்லர் (Men Beauty Parlour) எனமாற்றியது கூட உலகமயமாக்கலின் ஒரு விளைவுதான். எந்த கடையில் முடிவெட்டிக்கொண்டாலும் சிறுவயதில் முடிவெட்டிக்கொண்ட அனுபவங்கள் அவ்வப்போது கண்முன்னே வந்துவிட்டு செல்லும். பொதுவாக ஆண்களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த சலூன் கடை அனுபவங்கள் கிட்டத்தட்ட அனேகம்பேரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத சில விசயங்களை கொண்டிருக்கும்.



 சலூன் என்றால் இப்படித்தான் இருக்கும் என சில அடையாளங்கள் உண்டு. இந்த அடையாளங்கள் பல மாநிலங்களை பணி நிமித்தமாக சுற்றியபோது நான் பார்த்த அளவில் ஒரேமாதிரியாகவே இருந்திருக்கிறது. சுழல் இருக்கைகள், சுற்றிலும் பெரிய நிலைக்கண்ணாடிகள், தண்ணீரை பீய்ச்சியடிக்கும் போத்தல், உயரமான பான்ட்ஸ் பவுடர் டின், காத்ரெஜ் ஹேர் டை, மேலும் கலர் கலராக சில அமிலங்கள் நிரம்பிய போத்தல்கள், வெட்டியெடுத்த வைரம் போன்ற பெரிய படிகாரம் என அடுக்கி வைத்திருப்பார்கள். சலூன்கடை சங்கத்தினரின் விலைப்பட்டியலை சுவரில் கட்டிதொங்கவிட்டிருப்பார்கள். ஒரே வித்தியாசம் நம்மூர் கடைகளில் ஸ்டெப் கட்டிங்கில் கமல்ஹாசனும், வட மாநிலங்களிலும் அமீர்கானும் சுவரில் முறைத்துக்கொண்டிருப்பார்கள்.

சிறுவயதில் என் தந்தை என்னையும் எனது அண்ணன்கள் இரண்டுபேரையும் வழக்கமாக ஜெமீலா சலூனுக்கு முடிவெட்ட அழைத்துச்செல்வதுண்டு. அந்த சலூன் அப்போதைய சலூன் கடைகளில் பெரியது. அந்தக்கடை வைத்திருக்கும் அண்ணாச்சி வாயில் வெற்றிலையைக் குதப்பிக்கொண்டு,முடியையும் வெட்டிக்கொண்டு அங்கு இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு என மூன்று வேலைகளையும் ஒரே சமயத்தில் பார்ப்பார், எந்த நேரம் குதப்பிய வெற்றிலைச்சாறு நம்மைக் குளிப்பாட்டப்போகிறது என்ற பயத்திலேயே அமர்ந்திருப்பதுண்டு.

கிழிந்த இருக்கையின் வெளியே துருத்திக்கொண்டிருக்கும் நார்பஞ்சு நிக்கரை துளைத்து உள்ளே பதம்பார்த்து நாம் நெளிந்துக்கொண்டிருக்க, "நேரா இரியாம்டே, உள்ள கிருமி கடிக்கா?" என மனசாட்சியே இல்லாமல் கேட்பார். இனி இந்தக்கடைக்கே வரக்கூடாது எனநினைத்தாலும் அதை முடிவு செய்வது என் தந்தை என்பதால் மறுபடியும் அதே கடை.

மீசையும், தாடியும் முளைக்குவயதில், சவரம் செய்தால் சீக்கிரம் முளைக்கும் என்ற அனுபவஸ்தர்களின் அறிவுரையில் சூப்பர்மேக்ஸ் ப்ளேடை வாங்கி சோப்பு நுரை பதைத்து சவரம் செய்யும்போது முகத்தில் புது ப்ளேடு ஏற்படுத்திய தழும்புகளை வீரத்தழும்பாக நினைத்து மகிழ்ந்த காலங்களும் உண்டு.

சுயமாக சவரம் செய்வர்களுக்கு ஒரு அறிவுரை, சவரம் செய்யும்போது சொந்த வயலை எப்படியும் ஊழவு செய்யலாம் என நினைத்து மேலும் கீழுமாக மழிக்கவேண்டாம். இதனால் முகத்தின் மயிர்கால்கள் உடைந்து சருமம் பாதிக்கப்படும், மேலிருந்து கீழாக மட்டும் மழிப்பதே சரியான முறை.

பொதுவாக சலூன் கடைகளில் பதின்வயது முகப்பருக்கள் நிரம்பிய இளவட்டங்களின் கூட்டம் எப்போதும் இருக்கும், திருட்டு தம், லவ்லெட்டர், மற்றும் பல உலகவிசயங்கள்(?) பறிமாறிக்கொள்ளப்படும் ஆண்களின் அந்தரங்க ஸ்தலமாகவும் இருக்கும். நிமிடத்திற்கொருமுறை கண்ணாடியைப்பார்த்து தலைவாரிக்கொண்டும், திருமுகத்தை கண்ணாடிக்குப்பக்கத்தில் கண்ணாடியே பயப்படும் வகையில் நின்று ரசிப்பதும் என சலூன் கடை கண்ணாடிகள் மட்டும் எப்போதும் ஓய்வ்வில்லாமல் வேலைசெய்துகொண்டிருக்கும். தினத்தந்தியை ஓசியில் படிக்கும் சிலரும் அவ்வப்போது வந்துப்போவார்கள்.



 இந்தத்துறையில் தற்போது சிறிய நகரங்களிலும் ஆடம்பரமான ஆண்கள் அழகு நிலையங்கள் வரத்துவங்கிவிட்டன. முடிவெட்டவும், சவரம் செய்யவும் சென்றுக்கொண்டிருந்த சலூன் கடைகள், ஆண்கள் அழகுநிலையம் என்ற பெயரில் ஒரேக்கடையில் பல சேவைகளை செய்துகொடுக்கிறார்கள். ஒருமுறை சென்றுவந்தால் அங்கு கொடுக்கும் பணத்தில் சாதாரண கடைகளில் பலதடவை முடியையும் வெட்டி சவரமும் செய்துவிடலாம்.

விடுமுறையில் இதுபோன்ற ஒரு கடையில் சென்றபோது, ஒரு சலூன் கடைக்கான அடையாளங்கள் அறவே மாறியிருந்தன. ஊழியர்கள் சீருடை அணிந்திருக்கிறார்கள், கையுறை அணிகிறார்கள், கத்திரிக்கோலை "ஸ்டெர்லைஸ்" செய்கிறார்கள், பன்னாட்டு நிறுவனங்களின் அழகு சாதனைங்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள்.காத்திருப்போர் இருக்கைகளில் பன்னாட்டு ஃபேஷன் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் இறந்துகிடக்கின்றன.
 "ஸ்டெப் கட்டிங்" கமல்ஹாசனுக்கு பதிலாக "ஸ்பைக்" வைத்த டாம் க்ருஸ்-ம், "டெவில்லாக்" வைத்த ஜான் ஆப்ரகஹாமும் சுவரில் முறைத்துக்கொண்டிருந்தார்கள்.  ஆனால் கிழியாத சுழல் இருக்கையில் சொகுசாக அமந்திருக்கும் போது வெற்றிலை குதப்பிய அண்ணாச்சியின் முகம் மட்டும் ஏனோ கண்முன் வந்து செல்வதை தவிர்க்க முடிவதில்லை.



Tuesday, January 24, 2012

ழ,ள,ல,ற,ண,


எனக்குத்தெரிந்து தங்கள் தாய் மொழியை சரியான உச்சரிப்புடன் பேசாத மக்கள் தமிழர்களாகத்தான் இருக்க முடியும். ஆனால் இங்குதான் தமிழினத்தலைவர்களும், தமிழ்காக்கும் காவலர்களும், தமிழ் தமிழ் என்று கதறும் சினிமா நாயகர்களும் அதிகம்.


கேரளத்தில் படித்தவர்களும், படிக்காதவர்களும் அவர்கள் மொழியை உச்சரிக்கும் விதத்தை கவனியுங்கள். தமிழ் மொழியில் உள்ள ஒலிகள் அதிகம் பயன்படுத்தப்படும் மலையாளத்தை அவர்கள் தவறாக உச்சரிப்பதில்லை. பூ-வை புஷ்பம் என்றும் சொல்லலாம் புய்ப்பம் என்று சொல்லலாம் என்ற நகைச்சுவையைப்போல "வாழைப்பழம்" என்பது "வாலைப்பலம்" ஆகி தற்போது "வாயப்பயம்" என்றும் சொல்லும் என்ற அளவிற்கு நம் மக்கள் தமிழை வளர்க்கிறார்கள்.

மக்கள் தமிழை ஒரு பக்கம் வளர்த்துக்கொண்டிருக்க, சின்னத்திரை சானல்கள் தாறுமாறாக தமிழை வளர்க்கின்றன. புதிய தலைமுறை என்ற செய்தி சானலை பார்க்கும் துக்க சம்பவம் நிகழ்ந்தது. இங்கு சானலின் பெயரை குறிப்பிடுவதில் எந்த தயக்கமும் இல்லை. இப்படி ஒரு மோசமான தமிழ் உச்சரிப்பில் செய்தி வாசிக்கும் எந்த செய்தி சானலையும் இதுவரை பார்த்ததில்லை. வாசிப்பது மட்டுமின்றி திரையின் கீழே வரும் துணுக்கு செய்திகளில் சாதாரணமாக நிறைய பிழைகள். ஒரு வெகுஜன ஊடகம் தவறான உச்சரிப்பில் செய்தி வாசிப்பதும், எழுத்துப்பிழை செய்வதும் நிச்சயம் ஏற்புடையதே அல்ல.


ஒரு பற்பசை விளம்பரத்தில் பல்மருத்துவர், சிகிச்சைக்காக வரும் சிறுவனிடம் உன் பெல்லைக்காட்டு என்கிறார். பல்மருத்துவர் ஏன் பெல்லைக்காட்டச்சொல்கிறார் என மிரளவேண்டாம், அவர் பல்லைத்தான் காட்டச்சொல்கிறார். இப்படி குத்து மதிப்பாக நாம் அர்த்தங்களையும் புரிந்துக்கொள்ளும் நிலையில் இருக்கிறோம்.

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பேருந்தில் நமது நடத்துனர் பயணிகள் கூட்டத்தில் "வளிவிடு வளிவிடு" படு சீரியஸாக கத்திக்கொண்டிருக்க கேரள பயணிகள் விழுந்து விழுந்து சிரிப்பதை பார்க்கமுடியும். ஒரு எழுத்து மாற்றி உச்சரிப்பதால் அங்கு அர்த்தமே மாறிவிடுகிறது.

இவை வேண்டுமென்றே தவறாக உச்சரிக்கப்படுதில்லை என்றாலும் மொழியை எப்படியும் உச்சரிக்கலாம் என்ற சிந்தனை எப்படி நம் மக்களுக்குள் உருவானது எனத்தெரியவில்லை. தமிழர்கள் பிற மொழிகளில் பேசும்போது அதை தவறாக உச்சரிக்கும் பட்சத்தில் அவர்களால் திருத்தப்படுகிறோம், கிண்டலுக்குள்ளாகிறோம். ஆனால் நம் மக்கள் தமிழையே அப்படித்தான் உச்சரிக்கிறார்கள்.


பள்ளியில் கற்றுக்கொண்ட எழுத்துக்களின் ஒலி உச்சரிப்பை மறந்துப்போனவர்கள் கலைஞர் பேசிய உரையை கேட்டு உச்சரிப்பை பழகிக்கொள்ளுங்கள், அல்லது இளைராஜா பாடிய பாடல்களை கேட்டாவது தமிழின் உச்சரிப்பை கற்றுக்கொள்ளுங்கள், இல்லையெனில், ஒரே வழி தான் இருக்கிறது  "வாயப்பயம்" போன்ற வார்த்தைகளை தமிழ் அகராதியில் சேர்த்து அதுதான் சரி என்று மாற்றி விடுவோம்.

Sunday, January 22, 2012

மு(தொ)ல்லைப் பெரியாறு...


நம்மூரில் சீசனுக்கு பழங்கள் வருவதுபோல இப்போது பிரச்சனைகளும் சீசனுக்கு சீசன் வந்து போய்க்கொண்டிருக்கிறது. படுதீவிரமாக இருந்த முல்லைப்பெரியாறு பிரச்சனை அமைதியாகிவிட்டது. புரட்சியாளர்களும், தமிழுணவாளர்களும் அடுத்த சீசன் வரட்டும் என காத்திருக்கிறார்கள்.


தொழில்நுட்பம் எக்கச்சக்கமாக வளர்ந்துள்ளதால் புதிதாக நிறைய குபீர் தமிழுணவாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். தெருவில் இறங்கி போராடினால் ஒரு நாள் "லாஸ் ஆஃப் பே" ஆகிவிடும் என்பதால் சிகரெட் அட்டையின் பின்புறத்தை தவிர அனைத்து சமூகவலைத்தளங்களிலும் அழுதுபுரண்டிருப்பதை படிக்கும்போது "ஏழாம் அறிவு" சினிமாவை பார்த்தபோது உண்டானதை விட நம் உடலில் தமிழ் ரத்தம் சூடாகி தாறுமாறாக ஓடுகிறது

விவசாயிகளுக்காக விவசாயிகள் மட்டுமே தெருவில் இறங்கிபோராட வேண்டும் என்பது மீண்டும் ஒருதடவை நிரூபணமாகி இருக்கிறது. வன்முறை மட்டுமே தெரிந்த சில அமைப்புகளும், சில சந்தர்ப்பவாதி கட்சிகளும் ஆட்டத்தில் நாங்களும் உண்டு என கரைவேட்டியுடன் காட்சிபிழை காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நமது தமிழினத்தலைவரோ அணை அமைந்திருக்கும் பீர்மேடு பகுதி தமிழ்நாட்டிற்கு சொந்தமானது என்ற கண்டுபிடிப்பை சொல்லியிருக்கிறார், இதை அவர் ஆட்சியேலேயே சொல்யிருந்தால் உடன்பிறப்புகள் அதையும் கையகப்படுத்திருப்பார்கள். அணைப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம்.

ஃபேஸபுக்கில் வாக்குப்பெட்டி வைத்து முல்லைப்பெரியாறு அணையும் உடையுமா? உடையாதா? என்ற கேள்விக்கு நான்கு பதில்களை வைத்து, உடையாது என்ற பதிலில் ஓட்டுக்குத்தி படுதீவிரமாக அணையின் ஸ்திரத்தன்மையை நிரூபிக்கிறார்கள். தவறுதலாக அந்தப்பக்கம் வரும் சில தமிழ்தெரிந்த சில மலையாளிகள் உடையும் என்பதில் குத்திவிட்டு தங்கள் தரப்பு நியாயத்தையும் சொல்லுகிறார்கள். உச்சநீதிமன்றம் அமைத்த நடுவர் குழு பேசாமல் இதைவைத்தே தங்கள் முடிவை தெரிவித்துவிடலாம்.

அரசும், ஊடகமும் இணைந்து ஒரு பிரச்சினையில் ஒரே தீர்வுக்காக இறங்கினால் விளைவு எப்படி இருக்கும் என்பதையே கேரளமாநிலத்தில் மு.பெ.பிரச்சனையில் காணமுடிந்தது. அணை உடைந்தால் இத்தனை குடும்பகள் பாதிக்கப்படும் என மலையாள மனோரமாவின் தலைப்புச்செய்தியே இருபது வருடங்களுக்கு மேலாக மக்களின் ஆதரவு இன்றி இருந்த இப்பிரச்சனைக்கு மக்களின் ஆதரவைப்பெற்றுத்தந்தது. இதன் தொடர்ச்சியாக நடந்த சில நகைச்சுவையான சம்பவங்கள் நிறைய உண்டு.

எனது அலுவலகத்தில் இருக்கும் கொச்சியை சேர்ந்த நண்பர் ஒருவர் படுசோகமாக முகத்தை வைத்துக்கொண்டு அணை உடைந்தால் என் குடும்பத்தை உடனே கோழிகோடில் உள்ள தன் உறவினர் வீட்டுக்கு போகசொல்லிருக்கிறேன் என்கிறார். இன்னொருவரோ அதான் தண்ணிர் தருகிறோம்னு சொல்றோமல்ல அப்புறம் ஏன் அணையை கட்டுவுடமாட்டீறீங்கனு உம்மன் சாண்டியின் பன்ஞ் டயலாக்கை அடிக்கடி உதிர்த்துக்கொண்ருக்கிறார்.

கொடுமையின் உச்சமாக ஒரு மலையாள பண்பலை-ல் இரண்டு ரேடியோ "ஜோக்கி"கள் பேசிக்கொண்டிருந்ததுதான். முல்லைப்பெரியாறு அணையை கட்டியபோது, அணையைப்பற்றிய ஆவணங்களும், இரு மாநிலங்களுக்கும் இடையேயான அணை ஒப்பந்தம் பற்றிய ஆவணங்களும் பிரிட்டிஷ் அரசு லண்டனிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், லண்டன் ஆவணக்கிடங்கில் அதனை ஒரு பண்பலை நேயர் சேகரித்து வருவதாகவும், அந்த ஒப்பந்ததைப்பற்றிய உண்மையான விவரங்களை அரசிடம் சமர்ப்பிப்பதாக பேசிக்கொண்டிருந்ததுதான். இவர்களை பார்க்கும்போது  நமக்கு பரிதாபம்தான் வருகிறது.

இந்த முல்லைப்பெரியாறு சீசன் இன்னும் நூறுவருடங்களுக்கு அணையைப்போல ஸ்திரமாக தொடர்ந்து வந்துப்போய்கொண்டிருக்கும், ஆனால் அடுத்த தலைமுறை குபீர் தமிழுணவாளர்கள் தங்கள் நியாயத்தை எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதில் பதிவு செய்வார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

Sunday, January 1, 2012

MY NEW YEAR WISHLIST- 2012



ஃபேஸ்புக்கில் இட்டதை மொழிபெயர்த்து, தட்டச்சு செய்ய நேரம் இல்லாததால் சோம்பல் கொண்டு அப்படியே காப்பி பேஸ்டுகிறேன் தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும். :))


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.



MY NEW YEAR WISHLIST- 2012


1. An amicable Solution on Mullai Peryar & Koodangualm issue


2. Manmohan Opens his mouth


3. M.K.Azhagiri Speaks in Parliment.


4. Rahul Gandhi get married and concentrate on his wife instead of this Country.


5. SC announce RASA and KANIMOZHI are criminals in 2G SCAM


6. Amma stop Revenge and focusing on deve. of TN


7. Ramadas dispose PMK


8. Powerstar's "Ananda thollai" breaks ChanraMuki's Record.


9. Sam Anderson come back to Cinema.


10. Tamil Bloggers stop releasing Books


11. FB Friends stop tagging me...


12. Actor Vijay stop acting

FEEDJIT Live Traffic Feed