Friday, January 27, 2012

சலூன்


தற்போது சலூன் கடைகள் எல்லாம் ஆண்கள் அழகு நிலையங்களாகிவிட்டன.  சலூன் கடை என்பதை "மென் பியூட்டி பார்லர் (Men Beauty Parlour) எனமாற்றியது கூட உலகமயமாக்கலின் ஒரு விளைவுதான். எந்த கடையில் முடிவெட்டிக்கொண்டாலும் சிறுவயதில் முடிவெட்டிக்கொண்ட அனுபவங்கள் அவ்வப்போது கண்முன்னே வந்துவிட்டு செல்லும். பொதுவாக ஆண்களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த சலூன் கடை அனுபவங்கள் கிட்டத்தட்ட அனேகம்பேரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத சில விசயங்களை கொண்டிருக்கும்.



 சலூன் என்றால் இப்படித்தான் இருக்கும் என சில அடையாளங்கள் உண்டு. இந்த அடையாளங்கள் பல மாநிலங்களை பணி நிமித்தமாக சுற்றியபோது நான் பார்த்த அளவில் ஒரேமாதிரியாகவே இருந்திருக்கிறது. சுழல் இருக்கைகள், சுற்றிலும் பெரிய நிலைக்கண்ணாடிகள், தண்ணீரை பீய்ச்சியடிக்கும் போத்தல், உயரமான பான்ட்ஸ் பவுடர் டின், காத்ரெஜ் ஹேர் டை, மேலும் கலர் கலராக சில அமிலங்கள் நிரம்பிய போத்தல்கள், வெட்டியெடுத்த வைரம் போன்ற பெரிய படிகாரம் என அடுக்கி வைத்திருப்பார்கள். சலூன்கடை சங்கத்தினரின் விலைப்பட்டியலை சுவரில் கட்டிதொங்கவிட்டிருப்பார்கள். ஒரே வித்தியாசம் நம்மூர் கடைகளில் ஸ்டெப் கட்டிங்கில் கமல்ஹாசனும், வட மாநிலங்களிலும் அமீர்கானும் சுவரில் முறைத்துக்கொண்டிருப்பார்கள்.

சிறுவயதில் என் தந்தை என்னையும் எனது அண்ணன்கள் இரண்டுபேரையும் வழக்கமாக ஜெமீலா சலூனுக்கு முடிவெட்ட அழைத்துச்செல்வதுண்டு. அந்த சலூன் அப்போதைய சலூன் கடைகளில் பெரியது. அந்தக்கடை வைத்திருக்கும் அண்ணாச்சி வாயில் வெற்றிலையைக் குதப்பிக்கொண்டு,முடியையும் வெட்டிக்கொண்டு அங்கு இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு என மூன்று வேலைகளையும் ஒரே சமயத்தில் பார்ப்பார், எந்த நேரம் குதப்பிய வெற்றிலைச்சாறு நம்மைக் குளிப்பாட்டப்போகிறது என்ற பயத்திலேயே அமர்ந்திருப்பதுண்டு.

கிழிந்த இருக்கையின் வெளியே துருத்திக்கொண்டிருக்கும் நார்பஞ்சு நிக்கரை துளைத்து உள்ளே பதம்பார்த்து நாம் நெளிந்துக்கொண்டிருக்க, "நேரா இரியாம்டே, உள்ள கிருமி கடிக்கா?" என மனசாட்சியே இல்லாமல் கேட்பார். இனி இந்தக்கடைக்கே வரக்கூடாது எனநினைத்தாலும் அதை முடிவு செய்வது என் தந்தை என்பதால் மறுபடியும் அதே கடை.

மீசையும், தாடியும் முளைக்குவயதில், சவரம் செய்தால் சீக்கிரம் முளைக்கும் என்ற அனுபவஸ்தர்களின் அறிவுரையில் சூப்பர்மேக்ஸ் ப்ளேடை வாங்கி சோப்பு நுரை பதைத்து சவரம் செய்யும்போது முகத்தில் புது ப்ளேடு ஏற்படுத்திய தழும்புகளை வீரத்தழும்பாக நினைத்து மகிழ்ந்த காலங்களும் உண்டு.

சுயமாக சவரம் செய்வர்களுக்கு ஒரு அறிவுரை, சவரம் செய்யும்போது சொந்த வயலை எப்படியும் ஊழவு செய்யலாம் என நினைத்து மேலும் கீழுமாக மழிக்கவேண்டாம். இதனால் முகத்தின் மயிர்கால்கள் உடைந்து சருமம் பாதிக்கப்படும், மேலிருந்து கீழாக மட்டும் மழிப்பதே சரியான முறை.

பொதுவாக சலூன் கடைகளில் பதின்வயது முகப்பருக்கள் நிரம்பிய இளவட்டங்களின் கூட்டம் எப்போதும் இருக்கும், திருட்டு தம், லவ்லெட்டர், மற்றும் பல உலகவிசயங்கள்(?) பறிமாறிக்கொள்ளப்படும் ஆண்களின் அந்தரங்க ஸ்தலமாகவும் இருக்கும். நிமிடத்திற்கொருமுறை கண்ணாடியைப்பார்த்து தலைவாரிக்கொண்டும், திருமுகத்தை கண்ணாடிக்குப்பக்கத்தில் கண்ணாடியே பயப்படும் வகையில் நின்று ரசிப்பதும் என சலூன் கடை கண்ணாடிகள் மட்டும் எப்போதும் ஓய்வ்வில்லாமல் வேலைசெய்துகொண்டிருக்கும். தினத்தந்தியை ஓசியில் படிக்கும் சிலரும் அவ்வப்போது வந்துப்போவார்கள்.



 இந்தத்துறையில் தற்போது சிறிய நகரங்களிலும் ஆடம்பரமான ஆண்கள் அழகு நிலையங்கள் வரத்துவங்கிவிட்டன. முடிவெட்டவும், சவரம் செய்யவும் சென்றுக்கொண்டிருந்த சலூன் கடைகள், ஆண்கள் அழகுநிலையம் என்ற பெயரில் ஒரேக்கடையில் பல சேவைகளை செய்துகொடுக்கிறார்கள். ஒருமுறை சென்றுவந்தால் அங்கு கொடுக்கும் பணத்தில் சாதாரண கடைகளில் பலதடவை முடியையும் வெட்டி சவரமும் செய்துவிடலாம்.

விடுமுறையில் இதுபோன்ற ஒரு கடையில் சென்றபோது, ஒரு சலூன் கடைக்கான அடையாளங்கள் அறவே மாறியிருந்தன. ஊழியர்கள் சீருடை அணிந்திருக்கிறார்கள், கையுறை அணிகிறார்கள், கத்திரிக்கோலை "ஸ்டெர்லைஸ்" செய்கிறார்கள், பன்னாட்டு நிறுவனங்களின் அழகு சாதனைங்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள்.காத்திருப்போர் இருக்கைகளில் பன்னாட்டு ஃபேஷன் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் இறந்துகிடக்கின்றன.
 "ஸ்டெப் கட்டிங்" கமல்ஹாசனுக்கு பதிலாக "ஸ்பைக்" வைத்த டாம் க்ருஸ்-ம், "டெவில்லாக்" வைத்த ஜான் ஆப்ரகஹாமும் சுவரில் முறைத்துக்கொண்டிருந்தார்கள்.  ஆனால் கிழியாத சுழல் இருக்கையில் சொகுசாக அமந்திருக்கும் போது வெற்றிலை குதப்பிய அண்ணாச்சியின் முகம் மட்டும் ஏனோ கண்முன் வந்து செல்வதை தவிர்க்க முடிவதில்லை.



10 comments:

Madhavan Srinivasagopalan said...

என்னடா இந்த வாரம் ரெண்டு சலூன் மேட்டர் !!
ரெண்டாவது சலூன் மேட்டர் இதோ..

பின்னோக்கி said...

முடி வெட்டிய பிறகு கடையில் பார்க்கும் போது நன்றாக/அதிகமாக இருக்கும் முடி, வீட்டுக்கு வந்து குளித்துவிட்டுப் பார்க்கும் போது ரொம்ப கம்மியாக தெரிவது ஏன் என்று இன்று வரை தெரியவில்லை.

சிறுவயதில், மீடியமா இருக்கட்டும் ரொம்ப குறைச்சிடாதீங்கன்னு சொன்னாலும் ஒரே மாதிரி ரொம்ப குறைச்சுடுவாங்க :)

சௌந்தர் said...

சூப்பர் சூப்பர்....

மாதவன் சார் சரியா சொல்லிட்டீங்க :)))

கோபிநாத் said...

கொசுவத்தி சூப்பர் ;-)


நட்சத்திர வாழ்த்துக்கள் மச்சி ;-)

koodal bala said...

இது என்னையும் பின்னே திரும்பி பார்க்க வைக்கிறது .சுமார் 25 வருடங்களுக்கு முன்பாக சவரம் செய்வதற்கு பிளேடை பயன்படுத்த மாட்டார்கள் .ஒரு பட்டாக்கத்தி ...பார்த்தாலே பயம் வரும் .அனுபவப் பதிவு அருமை!

Rathnavel said...

நல்ல பதிவு.

சங்கவி said...

நாம் முதல் முதலில் முடி வெட்டியவரை உங்கள்பதிவின்மூலம் நினைத்தேன்...

சிநேகிதன் அக்பர் said...

class :)

உலக சினிமா ரசிகன் said...

எனக்கு உதிரி பூக்கள் நாவிதர் ஞாபகத்துக்கு வந்தார்...
என்ன நான் சொல்றது...என்ற டயலாக்கை அவர் உச்சரிக்கும் அழகே தனிதான்.

Easwaran said...

30 வருஷம் முன்னால எங்கள் ஊர் கருணாகரன் அண்ணன்கிட்ட போய் ‘step cutting' (அவருதான் அப்ப ஸ்பெஷலிஸ்ட்) வெட்டிக்கிட்டத நினைச்சேன்! ஒரே சிப்பு சிப்பா வருது.

FEEDJIT Live Traffic Feed