Tuesday, January 24, 2012

ழ,ள,ல,ற,ண,


எனக்குத்தெரிந்து தங்கள் தாய் மொழியை சரியான உச்சரிப்புடன் பேசாத மக்கள் தமிழர்களாகத்தான் இருக்க முடியும். ஆனால் இங்குதான் தமிழினத்தலைவர்களும், தமிழ்காக்கும் காவலர்களும், தமிழ் தமிழ் என்று கதறும் சினிமா நாயகர்களும் அதிகம்.


கேரளத்தில் படித்தவர்களும், படிக்காதவர்களும் அவர்கள் மொழியை உச்சரிக்கும் விதத்தை கவனியுங்கள். தமிழ் மொழியில் உள்ள ஒலிகள் அதிகம் பயன்படுத்தப்படும் மலையாளத்தை அவர்கள் தவறாக உச்சரிப்பதில்லை. பூ-வை புஷ்பம் என்றும் சொல்லலாம் புய்ப்பம் என்று சொல்லலாம் என்ற நகைச்சுவையைப்போல "வாழைப்பழம்" என்பது "வாலைப்பலம்" ஆகி தற்போது "வாயப்பயம்" என்றும் சொல்லும் என்ற அளவிற்கு நம் மக்கள் தமிழை வளர்க்கிறார்கள்.

மக்கள் தமிழை ஒரு பக்கம் வளர்த்துக்கொண்டிருக்க, சின்னத்திரை சானல்கள் தாறுமாறாக தமிழை வளர்க்கின்றன. புதிய தலைமுறை என்ற செய்தி சானலை பார்க்கும் துக்க சம்பவம் நிகழ்ந்தது. இங்கு சானலின் பெயரை குறிப்பிடுவதில் எந்த தயக்கமும் இல்லை. இப்படி ஒரு மோசமான தமிழ் உச்சரிப்பில் செய்தி வாசிக்கும் எந்த செய்தி சானலையும் இதுவரை பார்த்ததில்லை. வாசிப்பது மட்டுமின்றி திரையின் கீழே வரும் துணுக்கு செய்திகளில் சாதாரணமாக நிறைய பிழைகள். ஒரு வெகுஜன ஊடகம் தவறான உச்சரிப்பில் செய்தி வாசிப்பதும், எழுத்துப்பிழை செய்வதும் நிச்சயம் ஏற்புடையதே அல்ல.


ஒரு பற்பசை விளம்பரத்தில் பல்மருத்துவர், சிகிச்சைக்காக வரும் சிறுவனிடம் உன் பெல்லைக்காட்டு என்கிறார். பல்மருத்துவர் ஏன் பெல்லைக்காட்டச்சொல்கிறார் என மிரளவேண்டாம், அவர் பல்லைத்தான் காட்டச்சொல்கிறார். இப்படி குத்து மதிப்பாக நாம் அர்த்தங்களையும் புரிந்துக்கொள்ளும் நிலையில் இருக்கிறோம்.

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பேருந்தில் நமது நடத்துனர் பயணிகள் கூட்டத்தில் "வளிவிடு வளிவிடு" படு சீரியஸாக கத்திக்கொண்டிருக்க கேரள பயணிகள் விழுந்து விழுந்து சிரிப்பதை பார்க்கமுடியும். ஒரு எழுத்து மாற்றி உச்சரிப்பதால் அங்கு அர்த்தமே மாறிவிடுகிறது.

இவை வேண்டுமென்றே தவறாக உச்சரிக்கப்படுதில்லை என்றாலும் மொழியை எப்படியும் உச்சரிக்கலாம் என்ற சிந்தனை எப்படி நம் மக்களுக்குள் உருவானது எனத்தெரியவில்லை. தமிழர்கள் பிற மொழிகளில் பேசும்போது அதை தவறாக உச்சரிக்கும் பட்சத்தில் அவர்களால் திருத்தப்படுகிறோம், கிண்டலுக்குள்ளாகிறோம். ஆனால் நம் மக்கள் தமிழையே அப்படித்தான் உச்சரிக்கிறார்கள்.


பள்ளியில் கற்றுக்கொண்ட எழுத்துக்களின் ஒலி உச்சரிப்பை மறந்துப்போனவர்கள் கலைஞர் பேசிய உரையை கேட்டு உச்சரிப்பை பழகிக்கொள்ளுங்கள், அல்லது இளைராஜா பாடிய பாடல்களை கேட்டாவது தமிழின் உச்சரிப்பை கற்றுக்கொள்ளுங்கள், இல்லையெனில், ஒரே வழி தான் இருக்கிறது  "வாயப்பயம்" போன்ற வார்த்தைகளை தமிழ் அகராதியில் சேர்த்து அதுதான் சரி என்று மாற்றி விடுவோம்.

16 comments:

Chitra said...

ஒரே வழி தான் இருக்கிறது "வாயப்பயம்" போன்ற வார்த்தைகளை தமிழ் அகராதியில் சேர்த்து அதுதான் சரி என்று மாற்றி விடுவோம்.

..... இதுதான் இறுதியில் நடக்கப் போகிறது என்று நினைக்கிறேன்.
விளம்பர படங்களில் வரும் தமிழ் , தமிழை எங்கேயோ கொண்டு செல்கிறது..... :-(
"எத்தனையோ அனுபவி" (Tangles) என்று புதிது புதிதாக சொல்கிறார்கள். தமிழுக்கே தமிழ் அர்த்தம் தெரியாமல் குழம்ப வேண்டியது இருக்கிறது.

கோபிநாத் said...

நல்ல பதிவு ! எனக்கும் சேர்த்து ;-)

Madhavan Srinivasagopalan said...

சரிங்க நாட்டாமை..

இந்திரா said...

சிந்தனைக்குரிய பதிவு.
(நான் இது பற்றி எழுதலாம் என்று யோசித்து வைத்ததுண்டு..)
பாராட்டுக்கள் நண்பரே.

Robin said...

மலையாளிகள் ழகரத்தை சரியாக உச்சரிப்பதைப் பார்த்து நானும் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். சிறு வயதிலேயே சரியாக உச்சரிக்க சொல்லிக்கொடுப்பதுதான் காரணம்.

Anonymous said...

vanakkam thiru naangil praththap avargale ippadi pesubavargalai enna seiyyalaam eppadi thiruththuvadhu thamizhukku vandha sogam
manavaruththudan surendran
nandri

MANO நாஞ்சில் மனோ said...

வெட்டி போட்டாலும் தமிழனுக்கு ழ உச்சரிப்பு வரவே வராது என்பது உண்மைதான்....!!!

பெசொவி said...

// ஒரே வழி தான் இருக்கிறது "வாயப்பயம்" போன்ற வார்த்தைகளை தமிழ் அகராதியில் சேர்த்து அதுதான் சரி என்று மாற்றி விடுவோம்.//

கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கிறது. ஆனாலும் யதார்த்தத்தின் நிலையும் அதுதான்.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நட்சத்திரமா??

வாழ்த்துகள் பிரதாப் :))

Anonymous said...

அல்லது இளைராஜா பாடிய பாடல்களை கேட்டாவது...

தயவு செய்து இளையராஜா-வின் பையன் யுவன் சங்கர்ராஜா பாடிய பாடல்களை கேட்டு விடாதீர்கள்!

ஹுஸைனம்மா said...

மலையாளிகளைத் திட்டிகிட்டாலும், அப்பப்ப சேம் சைட் கோலும் போட்டுக்குறீங்க. :-))))

Karikal@ன் - கரிகாலன் said...

உங்கள் ஆதங்கம் சரியானதுதான் நண்பரே. நான் அறிந்த வரையில் எந்த இனத்தவரும் தங்கள் தாய் மொழியில் பேசும்போது தவறு செய்வதாக தெரியவில்லை தமிழன் மட்டும் தான் அந்த வகை என்று நினைக்கிறேன். இதில் வேதனை என்னவென்றால் தான் தவறாக பேசுகிறோம் என்பதையே அவன் உணர மறுப்பதுதான்

துளசி கோபால் said...

பதிவின் கட்டக்கடைசி வரி சொல்வதுதான் சரி.

தமிழ் சானல்களில் அ'ரி'விப்பாளர் பேசுவதைக்கேட்டு நொந்து போனேன்.

நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

PRINCENRSAMA said...

சரியாகத் தமிழை உச்சரிக்கும் வெங்கட பிரகாஷ் படத்துக்குக் கீழே ’போராட்டம்’ - போரட்டமாகி வந்திருப்பது கொடுமை!

பழனி.கந்தசாமி said...

//ஒரே வழி தான் இருக்கிறது "வாயப்பயம்" போன்ற வார்த்தைகளை தமிழ் அகராதியில் சேர்த்து அதுதான் சரி என்று மாற்றி விடுவோம்.//

சித்ரா அம்மா சொல்வதுதான் சரி. அப்போதுதான் ஒரு மொளி வலரும்!

Mahi_Granny said...

ழ, ள, ல இவற்றை சரியாக உச்சரிக்காதவர்களை பார்க்கும் போது கோபம் வரும் . கொஞ்சம் முயற்ச்சித்தால் வரும்..வரவே வராது என்றில்லை. முயற்சிப்பதில்லை.

FEEDJIT Live Traffic Feed