சமுத்திரகனி(இயக்கம்), சசிகுமார்(தயாரிப்பு) கூட்டணியில் வெளிவந்த புதிய படைப்பு. இவர்களின் பழையை படைப்புகளை வைத்து இதுவும் ஒரு வித்தியாசமான படைப்பாக இருக்கும் என்ற ஒரே நம்பிக்கையே இந்தக்கூட்டணியின் மேல் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியது.
சமுத்திரக்கனி, சசிகுமார் போன்ற சிறந்த படைப்பாளிகள் தாங்கள் எழுதிவைத்த திரைக்கதையை முழுவதும் படித்துவிட்டுதான் படமாக்குகிறார்களா என்ற தேவையற்ற சந்தேகம் படம் முடிந்தவுடன் எழுகிறது.
80,90 களில் வெளிவந்த படங்களில் நையப்புடைக்கப்பட்ட சில டெம்ப்ளேட் கதைகள் உண்டு. வெட்டித்தனமாக திரியும் கதாநாயகன் சென்னைக்கு வந்து கஷ்டப்பட்டு ஒரேபாட்டில் பணக்காரனாக மாறுவது அதில் ஒன்று, சொத்துக்காக சொந்தபந்தங்களால் சிறுவதியதிலேயே வஞ்சிக்கப்படும் கதாநாயகன் வளர்ந்து அவர்களை சதியை முறியடிக்கும் மற்றொரு கதை. இந்த இருவேறு கதைகளை கொஞ்சம் டிங்கரிங் வொர்க் செய்து படம் பார்ப்பவர்களையும் ஒரு போராளியாக்குகிறார்கள். அந்த டிங்கரிங் வேலைக்காக அவர்கள் கையில் எடுத்திருக்கும் விஷயம், சொந்தங்களால் வேண்டாம் என துரத்தியடிக்கப்படம் மனநலம் குன்றியவர்கள் பற்றியது.
முதல் காட்சியில், ஒரு அறையில் இருந்து தன்னுடன் மற்றொருவரை கூட்டிக்கொண்டு தப்பித்துப்போகிறார் சசிகுமார். டைரக்டர் என்னமோ பெருசா சொல்லப்போராரு என்ற எதிர்பார்ப்புடன் நாமும் அமைதியாக காத்திருக்கிறோம். அங்கிருந்து தப்பித்த சசிகுமாரும் அவரது நண்பரும் சென்னைக்கு வருகிறார்கள்.
சென்னையில் கஞ்சாகருப்புவின் வீட்டில் தஞ்சம் புகும் இரண்டுபேரும் அண்டை வீட்டாருக்கு உதவிசெய்து, ஒரு பெட்ரோல் பங்கில் வேலையும் செய்கிறார்கள். இடைவேளை வரை கஞ்சா கருப்பின் சலித்துப்போன காமெடி டயலாக்களுடன் படம் நகர்கிறது. அவ்வப்போது பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் வந்து புண்சிரிப்பை வரவழைக்கிறார். இந்நிலையில் அவர்களை தேடி ஒருகும்பல் சென்னைக்கே வருகிறது. தேடிவந்த கும்பல் அவர்கள் இருவரும் பைத்தியக்காரர்கள், மனநலகாப்பகத்திலிருந்து தப்பித்து வந்துவிட்டார்கள் எனச்சொல்லவும் இடைவேளையும் வருகிறது.
இனியாவது படத்தைப்போடுவார்கள் என காத்திருக்கிறோம், இடைவேளை முடிந்ததும் யார் பைத்தியம், யார் நார்மல், ஏன், எதற்கு என்பதை படம் பார்க்கும் நாமே யூகித்துவிடுவதால் முதல் பாதியில் இருந்த கொஞ்ச நஞ்ச சுவாரஸ்யமும் இண்டாம் பாதியில் இல்லை.
அனநாதைகளாக விடப்படும் மனநலம் குன்றியவர்கள் மேல் அக்கறைப்படும் சமுத்திரக்கனி அந்த விசயத்தை இன்னும் பலமாக திரைக்கதையில் சொல்லியிருக்கலாம். ஏழாம் அறிவில் போதிதர்மனைப்போல சரக்குக்கு ஊறுகாயாகவே இதிலும் செய்திருக்கிறார்கள்.
இவர்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் சுந்தர் சி. பாபு பின்னணி இசைக்காக எந்த மெனக்கெடலும் செய்யவில்லை. நாடோடிகள் படத்தில் அடித்த அதை டராக்கை அப்படியே பொருத்தியிருக்கிறார்.
படம் முடியும்வரை பார்ப்பவர்களையும் போராளியாக மாற்றும் திரைக்கதை, படம் முடிந்தவுடன் ஏமாளியாக வெளியேற வைக்கிறது.


