கடந்த ஜுன் மாதம் ஊரிலிருந்து போது அண்ணன் மொபைலுக்கு அவரின் நண்பரிடமிருந்து போன் வந்தது, அண்ணன் வீட்டுல இல்ல என்ன விசயம்னு கேட்டா, அவரோட கடைல சினிமா ஷுட்டிங்காம், அண்ணன் ப்ரீயா இருந்தா வரச்சொல்லுன்னாரு, அண்ணன் வீட்டுல இல்ல நான் வரேன்னதும் சரிவான்னாரு. சும்மா வேடிக்கைப்பார்க்கத்தான்.
அண்ணனின் நண்பர் மீனாட்சிபுரம் மார்க்கெட்டுல பெரிய ஜவுளிகடை ஓனர். என்னபடம் யாரு என்னன்னு கூட கேட்கலை இதோ வந்துட்டேன்னு சொல்லி போனை கட் பண்ணிட்டு உடனே ஷேவ் பண்ணேன், குளிச்சேன், ட்ரஸ் அயர்ன் பண்ணேன், பேர்அன்ட் லல்லி போட்டேன்,முகத்துக்கு சுண்ணாம்பு அடிச்சேன், நாத்த மருந்து அடிச்சேன் கிளம்பிட்டேன். போறபோக்குல எங்ககூடவே சுத்துற பாசக்காரபய நண்பன் அராபத்தையும் கூட்டிக்கிட்டேன்.
விஜய்,தனுஷ் அந்த இத்துப்போன பர்சானலிட்டிக்கே நயன்தாராவை டாவடிக்கும்போது
(பிரபுதேவா வாழ்க) நம்ம பர்சனாலிட்டிக்கு என்ன குறைச்சல்...
நம்ம பெர்சானலிட்டியைப்பார்த்து ஒரு அமெரிக்கா மாப்பிள்ளை ரோலாவது கிடைக்காதா அப்படியே பில்டப் பண்ணி ஹீரோ, மினிஸ்டர், முதல்வர் ரேன்சுக்கு யோசிச்சுகிட்டே ஸ்பாட்டுக்குப்போனா கடைக்கு முன்னாடி ஒரே கூட்டம்.

அட தள்ளுங்கப்பா தள்ளுங்கப்பா கூட்டத்தை விலக்கிட்டு கடைக்குள்ள போனேன். ஒரு நாள் இந்த கூட்டம் எனக்காக வரப்போதுன்னு ஒரு கனவுவேற இடை இடைல பிளாஷ் ஆயிட்டு இருந்துச்சு. யாரு டைரக்டரு,என்னப்படம், யாரு ஹீரோன்னு கேட்காம முதல்ல யாரு ஹீரோயி்ன்னு தேடுனா ரெண்டு மொக்கை பிகருங்க ஒரு ஓரத்துல நின்னுட்டு இருந்துச்சு.
என்னடா சினிமா ஷூட்டிங்குன்னு சொன்னாரு இதென்னடான்னா ஏதோ மெகாசீரியல்ல
"காரு பிரேக்கை பிடிங்கி விடுறேன்டி"... "சோத்துல விஷத்தை வைக்கிறேன்டினு" கொலைவேறியோட வசனம் பேசுற சீரியல் நடிகைகள் மாதிரி இருந்துச்சு. அண்ணனின் நண்பருக்கு ஒரு வணக்கத்தைப்போட்டுட்டு என்னப் படம்னு கேட்டேன், அவர் சொன்னாரு(தவிர்க்க முடியாத காரணத்தால் படத்தின் பெயரை இங்கு சொல்லமுடியாது).
அப்ப அங்க ரொம்ப பில்டப் கொடுத்துட்டு இருந்த ஒருத்தரு கடைஓனர்கிட்ட அடிக்கடி பேசிட்டு இருந்தாரு, அவரு உதவி இயக்குனராம். அப்ப இயக்குனரை எங்கேன்னு கேட்டா அவரு வேற ஸ்பாட்டுல லொக்கேஷன் ரெடிபண்ணிட்டு இருக்காருன்னாரு. இங்க ஒரு சின்ன சீன்தான்(அந்த சீன் இல்லப்பா) எடுக்கப்போறதாச்சொன்னாரு. சே வடைபோச்சேன்னு வேடிக்கை மட்டும் பார்த்தேன்.
அன்னைக்கு எடுத்த காட்சி இதுதான். அந்த ரெண்டு பொண்ணுங்களும் துணி எடுத்துட்டு கடைக்கு வெளியே போகும்போது வெளியே நாலைந்து ரவுடிங்க அந்தப்பொண்ணுங்க கிட்ட ரவுடித்தனம் பண்ணுறாங்க, அந்தப்பொண்ணு ஓடுறாங்க, ஒட ஒண்ணும் இல்ல...ஒடறமாதிரி காண்பிச்சுட்டு கட்... இந்த காட்சியை மட்டும் 5 தடவை எடுத்துட்டு 6வது டேக்குலதான் ஒகே ஆச்சு... எனக்கு என்னமோ எல்லா டேக்கும் ஒரேமாதிரிதான் இருந்துச்சு. எதுக்கு 6 டேக்கு எடுத்துதாங்கன்னுதான் புரியல.. ஆனா அந்தப்படத்துக்கு அதுவும் அந்தக்காட்சி இத்தனை டேக்கு ரொம்ப ஓவர்.

ங்கொன்னையா... இதுல நீ எங்கடா மேகராக்குள்ள வந்தன்ன கேட்பது புரியுது. அவசரப்படக்கூடாது. ஷுட்டிங் இன்னும் முடியல... யூனிட், அவிங்களுக்குள்ளே ஏதோ பேசிட்டு இருந்தாங்க. உதவி இயக்குனர் அண்ணனின் நண்பருகிட்ட ரொம்ப நேரம் பேசிட்டு போன உடனே அவர்கிட்ட எண்ணன்னே இவ்வளவுதானா ஷுட்டிங் முடிஞசான்னு கேட்டா கடைக்கு பக்கத்துல இருக்குற பஸ்டாண்டுல ஒரு ஷாட் எடுக்குறாங்கன்னாரு. உடனே அங்கேயும் அட்டடன்ஸ் போட்டேன்.
அந்த சீன் துணி எடுக்க வந்த ரெண்டு பொண்ணுங்கள்ல ஒரு பொண்ணு ஒரு பையன்கூட ரோட்டுல வச்சு பேசற மாதிரி சீன். அந்த ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கும்போது ரோட்டுல அங்கேயும் இங்கேயும் பாதசாரிகள் நடக்கறதுக்கு சிலபேரை எற்பாடு பண்ணி வச்சிருந்தாங்க... அவுங்களை செட்டப்பண்ணிட்டு இருந்தாரு அந்த உதவி இயக்குனரு.
அப்பத்தான் அவருக்கு கண்ணுல பட்டது நானும், அராபத்தும்... கடைல வச்சு என்னை பார்த்ததுனால சட்டுனு அடையாளம் கண்டுட்டு சார் கொஞசம் நீங்களும் நடக்கிறீங்களான்னு கேட்டாரு. அடப்பாவி நடிக்கிறிங்களான்னு கேட்டுருந்தாக்கூட சந்தோஷமா போயிருப்பேன்...நடக்குறிங்களான்னு கேட்டான். கடைசில நம்மளை கூட்டத்தோடு கூட்டமா நடக்க வச்சுருவாம்போல... சரி... கெளரவமா, காமெராவா பார்த்தா காமெராதான் ஜெயிச்சுது. நானும் அராபத்தும் லெப்ட், ரைட்டுன்னு நடந்தோம். நல்லவேளை ரெண்டாவது டேக்குலேயே ஒக்கே ஆயிடுச்சு. ஆமா அது என்ன உலகப்படமா... இதே ரொம்ப ஓவரு.
டேக் ஒகே ஆனதும் அராபத்து கேட்டான் "ஏன்டா ஜூனியர் ஆர்டிஸ்ட்க்கு குவார்டரும், பிரியாணிபொட்டலுமும் வாங்கித்தருவாங்களடான்னு"... அதெல்லம் ஜுனியர் ஆர்டிஸ்ட்டுத்தான்டா நம்மள மாதிரி ஆளுகிடைக்காம கூட்டத்தோட கோவிந்தா போட்டா தரமாட்டங்கடா நமக்கெல்லாம் கேமராவுக்கு முன்னாடி நின்னதே பெரிய விசயம், சரி ரொம்ப நாக்கை தொங்கபோடத வா உனக்கு ஆசாத் ஹோட்டல்ல பிரியாணி ட்ரிட் வைக்கிறேனு சொல்லி அவனை தள்ளிட்டு போனேன்....நான் செய்த பாவத்துக்கு நான்தானே பரிகாரம் தேடனும்.
அப்பவும் நான் தன்னம்பிக்கை தளரவில்லை. இந்தப்படம் ரிலீஸ் ஆனதுக்கப்புறம் அதிகமா பேசப்படற காட்சியே நான் நடந்த அந்தகாட்சியாத்தான் இருக்கும், "யாரு அங்க நடந்துபோறது முகத்துல ஒரு பிளாஷ் தெரியுது, அந்தபையனை கூப்பிட்டுவாங்கனு"... மணிரத்னமும், ராம்கோபால்வர்மாவும் எங்கவீட்டுக்கு ஆள் அனுப்புற நாள் வெகுதொலைவில் இல்லை அப்படின்னு நம்பிட்டு இருந்தவனுக்கு ரெண்டு மாசம் முன்னாடி அந்த அசிர்ச்சி செய்தி கிடைத்தது. அந்தப்படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டார்களாம். கண்டிப்பா இது விக்ரம், சூர்யா, அபிஷேக் பச்சனின் நலவிரும்பிகள் பண்ண சதியாகத்தான் இருக்கும். எனக்கும் காலம் வரும்.
டிஸ்கி: அந்தப்படம் எங்கள் ஊரில் வாழ்ந்த ஒரு வீரனின் உண்மைக்கதையை படமாக எடுத்தார்கள். அந்தபடத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் இன்னும் உயிரோடு இருப்பதால் அந்தப்படத்திற்கு வந்த பலத்த எதிர்ப்பு காரணமாக படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. படத்தில் இயக்குனரிலிருந்து நான் வரை எல்லாமே புதுமுகங்கள். படத்தின் பெயர் வேண்டாமே...